சுதந்திர தினம்: நாளை கொடியேற்றுகிறார் ஜெயலலிதா-கோட்டையில் 4 அடுக்கு பாதுகாப்பு

 சுதந்திர தினத்தையொட்டி நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனால் கோட்டை மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 64-வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி விடாமல் இருக்க மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவை போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

8 மணிக்குக் கொடியேற்றுகிறார் ஜெயலலிதா

நாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். 

காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா கொடியேற்றுகிறார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின் போது காலை 9.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.

முதலமைச்சர் நாளை கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு வந்தடைவார்.

தலைமைச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமைத் தரைப்படைத் தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோரக் காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல் துறை இயக்குனர், காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையாளர் ஆகியோரை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைப்பார். முதலமைச்சர் திறந்தவெளி ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பினை பார்வையிடுவார்.

முதலமைச்சர் ஜெயலலிதா 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத் திருநாள் உரையினை நிகழ்த்துவார். பின்னர் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான ஆறு விருதுகள் மற்றும் மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான இரண்டு விருதுகளை வழங்குகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

4 அடுக்குப் பாதுகாப்பு

இதையொட்டி தலைமைச் செயலகத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வர் கொடியேற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு தலைமைச் செயலகத்தின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவாமல் இருக்க கடலோரப் பாதுகாப்புப் படை கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மெரினா, துறைமுகம் கடல் பகுதிகள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

இது தவிர முக்கியச் சாலைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அன்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது.

தமிழக ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்

சுதந்திரதினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய சுதந்திர தினத்தையொட்டி காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்திடும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கி ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர்களின் சிறந்த மதிநுட்பம், ஆர்வம், திறமை, கடின உழைப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் கீழ்கண்ட 7 காவல் அதிகாரிகளுக்குத் தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

ஜி. அகஸ்டின் பால் சுதாகர், காவல் ஆய்வாளர், கொரட்டூர் காவல் நிலையம், அம்பத்தூர் மாவட்டம்

சு. ரவிசந்திரன் காவல் ஆய்வாளர், தலைமையிடம், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை

கோ. வேல்முருகன், காவல் ஆய்வாளர், கணிணிவழி குற்றப்பிரிவு, சென்னை

வெ. சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு, இராமநாதபுரம்

கோ. சரவணன், காவல் ஆய்வாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, மதுரை

செ. சந்திரசேகர், காவல் ஆய்வாளர், மாநகர குற்றப் பிரிவு, கோயம்புத்தூர்

க. சவுந்தரராசன், காவல் ஆய்வாளர், செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காஞ்சீபுரம் மாவட்டம்

இதே போன்று 2011-ம் ஆண்டு காவல் துறையில் தனித்துப் பொறுப்பேற்று, பணியில் திறமை, உறுதி, மற்றும் அக்கறையுடன் தன்னிகரற்று விளங்கி, சிறந்த பொதுச்சேவையில் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களான கீழ்கண்ட 2 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

ஹேமா கருணாகரன், காவல் துறை துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) , கோயம்புத்தூர் மாநகரம்

அ. திலகவதி, காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்) , கோவை மாவட்ட காவல் தொலை தொடர்பு தொழில் நுட்பப் பிரிவு

மேற்கண்ட விருதுகளில் தலா எட்டு கிராம் எடை கொண்ட தங்கப் பதக்கமும், ரூ. 5 ஆயிரம் ரொக்கமும் அடக்கம். அவர்களுக்கு பின்னர் நடைபெறும் ஒரு விழாவில் முதல்வர் தன் கைகளால் வழங்குவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment