ரூ.41 கோடியில் 12 புதிய பாலங்கள்: ஜெ. திறந்து வைத்தார்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் ரூ.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை மாநகரின் போக்குவரத்து மிகுந்த மிக முக்கியமான சாலை யான ஈ.வெ.ரா. பெரியார் சாலை, சென்னை அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய பாலம், வேலூர் மாவட்டம், பாணாவரம் என்ற இடத்தில் ரயில்வே கடவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம்,



கோரையாறு என்ற இடத்தில் கோரையாற்றின் குறுக்கே 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்டப்பாலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் என்ற இடத்தில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் ஆகிய 4 புதிய பாலங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன், திருவண்ணாமலை மாவட்டம், கொளமஞ்சனூர் என்ற இடத்தில் 6.65 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், திண்டுக்கல் மாவட்டம், பாளையம் என்ற இடத்தில் 83 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம் மற்றும் குஜிலியம்பாறை என்ற இடத்தில் 59 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், திருச்சி மாவட்டம், அய்யாத்தூர் என்கிற இடத்தில் 3.31 கோடி ரூபாய் மதிப்பிலும், குணசீலம் கல்லூர் என்கிற இடத்தில் 2.75 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், விருதுநகர் மாவட்டம், சோழவரம் என்கிற இடத்தில் 2.37 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம்,

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் என்கிற இடத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் என்கிற இடத்தில் 1.06 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம் என மொத்தம் 8 புதிய பாலங்களை 18 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு நலத் திட்ட உதவிகள்:

அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கவர்னரின் உரையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு,

(1) முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் (2) ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் (3) ஆதரவற்ற பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் (4) ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யத்திற்கான தங்கத்துடன் உதவித் தொகை வழங்கும் திட்டம் (5) பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் (6) பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (7) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம் (8) தொழிற் கல்லூரிகளில் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணச் சலுகை போன்ற நலத் திட்டங்கள் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு முகாம்களில் இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10,000/- ரூபாய் வீதம் சுழல் நிதி வழங்கப்படும் எனவும் திருத்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 25 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் பெற்று வந்த மாதாந்திர பணக்கொடையும் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும் வழங்கினார்.

மேலும் புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்த செல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் எந்திரங்களையும் வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்று கொண்ட இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தி, தங்கள் வாழ்வில் வளம் காண பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வு ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment