தோள்களில் சூடி அழகு பார்க்க வெற்றி மாலை காத்திருக்கிறது, கண்ணியத்தோடு பெறுவோ்-ஜெ.

தமிழக வாக்காளர்களின் பேராதரவு நம்முடைய இயக்கத்திற்கு இருக்கிறது. வெற்றி மாலையை கழகத்தின் தோள்களில் சூடி அழகு பார்க்க, பெருமை கொள்ள தமிழ்நாடே காத்திருக்கிறது. நாம்தான் கண்ணியத்தோடு அந்த வெற்றி மாலையை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவினை பெறவேண்டும். அதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், ஒற்றுமையான முயற்சியும் மிகமிக அவசியம் என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன் என்று அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! கழக நிறுவனத்தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல் ஆசியோடும், தமிழக மக்களின் பேரன்போடும், அனைத்துத் தரப்பினரின் நல் ஆதரவோடும், உங்கள் அன்புச்சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நல்லாட்சி அமைந்திட, நீங்கள் அனைவரும் ஆற்றிய களப்பணிகளுக்கு முதற்கண் எனது அன்பு கலந்த நன்றியை இந்த மடல் வழியாக மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்குப் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தமிழக வாக்காளப் பெருமக்களை நாம் மீண்டும் கேட்டுக்கொள்ளும் நேரம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வழியாக நமக்கு வந்திருக்கிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர்கள் வரை உள்ளாட்சி மன்றத்தேர்தல் என்பது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா ஆகும்.

மாநில அரசின் மக்கள் நலப்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுவதில் உள்ளாட்சி மன்றங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமும், தொட்டிலும் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள்தான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மக்கள் தொண்டாற்ற விரும்புவோருக்கு ஜனநாயக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆரம்பப்பள்ளி உள்ளாட்சி அமைப்புகள். எனவே, இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் மக்கள் தொண்டு என்னும் கடமை உணர்வோடும் நடைபெறுவது மிகவும் அவசியம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சி மன்றப் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துகின்றபோது, உங்கள் அனைவரையும் மனதில் வைத்துத்தான் வேட்பாளர் தேர்வு நமது இயக்கத்தின் ஆட்சி மன்றக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

நம்முடைய இயக்கத்தின் மீதும், நம் அன்புக்குரிய தலைவராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீதும், உங்கள் அன்புச் சகோதரியாகிய என் மீதும் மிகுந்த பாசம் கொண்ட எண்ணற்ற கழக உடன்பிறப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் அனைவரையுமே மக்கள் பணியில் ஈடுபடுத்தி, உயர்ந்த பதவிகளில் அவர்களை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு.

இருப்பினும் பல கழக உடன்பிறப்புகளுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தர இயலாமல் போயிற்று. வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதாலேயே அவர்கள் இயக்கத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள் அல்ல. நீங்கள் அனைவருமே கழகத்தின் இதயம் போன்றவர்கள்; கண்களைப் போன்றவர்கள்; கழக வெற்றிக்குப் பாடுபடும் கருத்தும், கைகளும் உடையவர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன். கழக வளர்ச்சிக்காக, தேர்தல்களில் கழக வெற்றிக்காக, தன்னலம் கருதாது நீங்கள் ஆற்றும் பணிகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.

காலம் வரும்போது உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், மக்கள் தொண்டாற்றும் ஏக்கத்தையும் உரிய வகையில் நிறைவேற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொள்வேன்.

2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, கள்ள ஓட்டுகள் மூலமும், வாக்குச்சாவடிகளை மட்டுமல்லாமல் வாக்கு எண்ணப்பட்ட இடங்களையும் தி.மு.க.வினர் கைப்பற்றி அராஜகம் செய்த கோர சம்பவங்களை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

தமிழக வாக்காளர்களின் பேராதரவு நம்முடைய இயக்கத்திற்கு இருக்கிறது. வெற்றி மாலையை கழகத்தின் தோள்களில் சூடி அழகு பார்க்க, பெருமை கொள்ள தமிழ்நாடே காத்திருக்கிறது. நாம்தான் கண்ணியத்தோடு அந்த வெற்றி மாலையை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவினை பெறவேண்டும். அதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், ஒற்றுமையான முயற்சியும் மிகமிக அவசியம் என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

கடந்த ஐந்தாண்டு காலம் நடைபெற்ற ஊதாரித்தனமான தி.மு.க. அரசு சொல்லொண்ணா சிக்கல்களையும், நிர்வாக சீர்கேடுகளையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. உங்கள் அன்புச்சகோதரியாகிய நான், முந்தைய ஆட்சியினரின் ஒவ்வொரு முறைகேட்டையும் செப்பனிட்டு, தமிழகத்தை சீரான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதனால்தான், மக்கள் மனம் குளிர எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த முடிகிறது.

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கும், அனைத்துத் தரப்பு மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கும், நகர்ப்புற மக்களின் தேவைகளுக்கும் நம்முடைய அரசு செய்திருக்கும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, “இந்த ஆட்சிக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும், உறுதுணையாக நிற்கும் வகையிலும், எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று மக்களை சந்தித்து வாக்கு கேளுங்கள்.

உள்ளாட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்ற கழகத்தின் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் பகுதிகளில் உள்ள கழக உடன் பிறப்புகளை எந்தவித பாகுபாடும் இன்றி அரவணைத்து, அன்புகாட்டி, பொது மக்கள் முன் செல்லும்போது சகோதர உணர்வோடு சென்று வாக்கு சேகரிக்குமாறும், அதன் மூலம் வெற்றி மாலையை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்பாதங்களில் கொண்டு வந்து சேர்க்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஓரிரு இடங்களில் கழக வேட்பாளர்களை எதிர்த்து, கழக உடன்பிறப்புகளிலேயே சிலர் தாங்களும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இத்தகைய செயல் எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து, நமக்குள் போட்டிகளை தவிர்த்து, கழகத்தின் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒற்றுமையாய் தேர்தல் பணியாற்றுங்கள். போட்டியாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ள கழக உடன்பிறப்புகள் உடனடியாக தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மைவிட நம்முடைய இயக்கம் பெரிது. இயக்கத்தின் வெற்றியே நமது வெற்றி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட மக்கள் நல்வாழ்வு கனவுகளை நிறைவேற்றும் ஜனநாயக வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இரவு பகல் பாராமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுமாறு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment