9 இடங்களில் புதிய கலை, அறிவியல் அரசு கல்லூரிகள் – ஜெ இன்று தொடங்கி வைக்கிறார்

ஸ்ரீரங்கம், நெம்மேலி உள்ளிட்ட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில், 18 அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட 62 அரசு கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 3 அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், 9 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படுகின்றன.
இவை, அரசு கல்லூரிகளாக இல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே, அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 19 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கம் உட்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இவை தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும்.
கல்லூரி தொடங்கப்படும் இடங்களும், அதற்கான பல்கலைக்கழகங்களும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:
நெம்மேலி (சென்னை பல்கலைக்கழகம்)
நாகலாபுரம் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அரூர் (பெரியார் பல்கலைக்கழகம்)
கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்)
திருச்சுழி (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)
வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி
ஸ்ரீரங்கம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
ஆகிய 9 கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குனர் ஆகியோரது அறிக்கை கோரப்பட்டது.
அவர்களது பரிந்துரையினை அரசு பரிசீலித்து, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) தொடங்கலாம் என முடிவு செய்து கீழ்க்கண்ட உத்தரவிடப்படுகிறது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) 2011-2012-ம் கல்வியாண்டு முதல் தொடங்கிடவும் மற்றும் கல்லூரிக்கான நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்யப்படும் வரை அதனை தற்காலிகமாக இனாம்குளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திடவும் உத்தரவிடப்படுகிறது.
இந்த கல்லூரியில் ஒரு முதல்வரும், 8 உதவிப்பேராசிரியர்களும், 2 மொழிப்பாடங்களுக்கான உதவி பேராசிரியர்களும், ஒரு உடற்கல்வி இயக்குனரும், ஒரு நூலகரும் ஆக மொத்தம் 13 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. நிதியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், கம்ப்ïட்டர் இயக்குபவர், நூலக உதவியாளர், இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர், பெருக்குபவர் ஆகிய 17 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ. இங்கிலீஷ்), இளமறிவியல் கணினி அறிவியல் (பி.எஸ்சி கம்ப்ïட்டர் சயின்ஸ்), இளம்கலை வணிகவியல் (பி.காம்), இளமறியியல் கணிதம் (பி.எஸ்சி மேத்ஸ்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
தொடரா செலவினமாக, மரத்தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், புத்தகம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்கிட ரூ.5 லட்சம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், 25 கம்ப்ïட்டர்கள் மற்றும் சார்ந்த உபகரணங்கள் வாங்கிட ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.23 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் ஆண்டொன்றிற்கு ரூ.84 லட்சத்து 8 ஆயிரம் தொடர் செலவில் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
அலுவலக செலவிற்கு ஆண்டொன்றிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கல்லூரிக்கான தொடர் செலவினம் முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அந்த செலவினம் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த கல்லூரி நாவலூர் குட்டப்பட்டு, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நிரந்தரமாக தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு கல்லூரிக்கல்வி இயக்குனர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார். மேலும், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை செய்தியாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம், சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment