திமுகவினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல-ஜெயலலிதா

நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சி காலத்தில் நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் செய்தார்கள். ஆனால் அப்போதைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் செய்து வருகிறார்கள் என்று விளக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடந்தது. இவற்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறுகிறார்களே என்று கேட்டபோது,



நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சி காலத்தில் நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் செய்தார்கள். ஆனால் அப்போதைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் செய்து வருகிறார்கள்.

நாள்தோறும் ஏராளமான புகார்கள் குவிந்து வந்ததால் இதனை விரைவாக விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சிறப்பு பிரிவு காவல் துறையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பொது மக்களால் தரப்படும் உண்மையான புகார்கள் தான்.

அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். இதில் அரசியல் பழிவாங்கும் செயல் எதுவும் இல்லை. இதுவரை வந்துள்ள புகார்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது என்றார் முதல்வர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளாரே என்ற கேள்விக்கு ஸ்டாலின் கைது செய்யப்படவில்லையே என்றார் முதல்வர்.

திமுக ஆட்சியில், நில அபகரிப்பு புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கருணாநிதி கூறுகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, யாரையும் பழிவாங்கவில்லையே. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 2 மாதகாலமாக யாரையும் பழிவாங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்து வருகிறார்கள். காவல் துறையினர் அவர்களுக்கு வருகிற புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இது பழிவாங்குதல் இல்லை என்று மறுத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது,

இந்த வழக்கில் முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர்களது பதில் என்ன? என்று இந்த நாடே எதிர்பார்க்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராகவும், காங்கிரஸ் தலைவராகவும் உள்ள சோனியா காந்தியும் இதுகுறித்து ஒரு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட வேண்டும். நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்களது பதிலை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விவகாரத்தில் எந்த வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டபோது,

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் அவ்வப்போது சி.பி.ஐ.க்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் வலியுறுத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

அ.தி.மு.க. எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை பாராளுமன்ற இரு அவைகளிலும் வலியுறுத்துவார்கள். இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்கும் வழக்கில் தமிழக வருவாய் துறையை இணைத்தும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம் என்றார்.

ஹில்லாரியிடமிருந்து முழு ஆதரவு

இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஏதாவது உறுதி அளித்துள்ளதா? என்று கேட்டபோது,

மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரியிடம் இருந்து தான் நல்ல ஆதரவு கிடைத்தது. அமெரிக்க காங்கிரஸ் கமிட்டியும் இலங்கை மீது பொருளாதார தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் ஜெயலலிதா.

சமச்சீர் கல்வி குறித்த நீதிமன்ற உத்தரவுகள் குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றம் முடிவை அறிவித்துவிட்டதா? நீதிமன்றத்தில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லையே. முடிவை அறிவிக்கட்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த பிரச்சினையில் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment