தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி

தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய பெரும் வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
சென்னைக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டன்,  கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவ இன்று மாலை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதையடுத்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்ற ஹிலாரி கிளிண்டன், அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இருவரும், தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் தொழில் முதலீடு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினர்.
தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழில் முக்கிய இடத்தை பெற்று வளர்ந்து வருகிறது. உலகில் ஆட்டோமொபைல் கேந்திரமாக தமிழகம் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா எடு்த்துக் கூறினார். எரிசக்தி துறையில், குறிப்பாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் தமது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கினார். சாலைப் போக்குவரத்து முன்னுரிமை பெற்று வருவதையும் அவர் எடுத்துரைத்தார். இவற்றைக் கேட்டறிந்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து தெரிவித்தார்.
தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்க மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமெரிக்காவுக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். தொட்டில் குழந்தைகள் திட்டம், சத்துணவு திட்டம், பெண்குழந்தைகள் நலத்திட்டங்கள், மகளிர் சுயநிதித் திட்டங்கள்  உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவரங்களை அமெரிக்க துணைத் தூதரகத்திடம் அளிக்குமாறு ஹிலாரி கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் அகதிகள் போல் அவதிப்படும்  அவலம் நீடிப்பது குறித்து ஹிலாரி கிளிண்டனிடம் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக் கூறினார். இலங்கை தமிழ் மக்களின் துயரங்கள் குறி்த்து தாமும் வருத்தப்படுவதாக ஹிலாரி குறிப்பிட்டார்.
இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசா குறைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டி இக்குறையை நீக்குவதன் அவசியம் குறித்து ஹிலாரியிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
முதல்வரைச் சந்தித்த பின் கலாச்சேத்திராவுக்கு ஹிலாரி கிளிண்டன் சென்றார். அங்கு மோகினியாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அவருக்காக நடத்திக் காட்டப்பட்டன.

No comments:

Post a Comment