நில மோசடியில் சிக்கிய அ.தி.மு.க. வினர் கட்சியில் இருந்தே நீக்கம் – ஜெ அதிரடி


ஜெ அதிரடி
நில மோசடி புகாரில் சிக்கிய அதிமுக பிரமுகர்களை, முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் 24-வது வட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.இதே வழக்கில் சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி புகாரில் சிக்கியுள்ள இந்த 2 பேரையும் கட்சியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா நீக்கி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அ.தி.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல் பட்ட காரணத்தினாலும் சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 24-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ப. மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் அரசு தலைமைக் கொறடா மோகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment