சென்னை தூய்மைப் பகுதியாகிறது... ஹெலிகாப்டர் மூலம் ஜெ ஆய்வு!

 சென்னை மாநகர் முழுவதையுமே தூய்மைப் பகுதியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக சென்னையை சுற்றியுள்ள குப்பை கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலின் சமநிலையை நிலைநிறுத்தி நாம் சார்ந்திருக்கும் உயிர் சூழல் அமைப்புகளை முறையாக பாதுகாப்பதன் அவசியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும் ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள 2011-12ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு:

மேலும், சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றி, சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளைக் கண்டறிவதற்காக, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment