பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு

 தமிழக பட்ஜெட்டைவிளக்கி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல் முறையாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இதில் தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ. 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ரூ. 8900 கோடி அளவுக்கு திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுளளன.



இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள்ள பட்ஜெட் குறித்து மக்களிடையே விளக்கி கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ள 20112012 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனை முன்வைத்து அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் 13.08.2011 மற்றும் 14.08.2011 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிடப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட அதிமுக செயலாளரும், மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை அதிமுக நிர்வாகிகளுடனும் மற்றும் எம்ஜிஆர் மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உட்பட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், அதிமுக நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் மது-போடியில் ஓ.பன்னீர்செல்வம்

இதேபோல அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு பேசுவோரின் பட்டியல்களை முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

அதன்படி பேசுவோர் விவரம்:

13 ஆம் தேதியன்று கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன்ஆர்.கே.நகர் தொகுதியிலும், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், கே.ஏ.செங்கோட்டையன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பி.எச்.பாண்டியன் ராயபுரம் தொகுதியிலும், விசாலாட்சி நெடுஞ்செழியன் தாம்பரம் தொகுதியிலும், மு.தம்பிதுரை கரூர் தொகுதியிலும், செம்மலை சைதாப்பேட்டை தொகுதியிலும் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பிற தொகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பேசவுள்ளனர்.

No comments:

Post a Comment