சட்டமன்ற தீர்மானம் மூலம் வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ புகழாரம்

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோடானு கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல்வர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் மூன்று பேரும் தனித்தனி கொட்டடிகளில் 24 மணி நேரமும் பூட்டப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் வெளியே சுதந்திரமாக உலவ ஆணையிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தவுடன் உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற வளாகத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி மேலிட, முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இப்படி ஒரு காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுவரை பார்த்தது இல்லை. நிரபராதிகள் காப்பாற்றப்பட்டுவிட்டனர். நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழ்க்குலமே மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் வைகோ.

No comments:

Post a Comment