அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்

இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்

கம்ப்யூட்டர் பயிற்சித் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 9.12 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்கப்பட உள்ளது. லேப்-டாப் கொள்முதல் செய்யும் பணியை அரசு நிறுவனமான எல்காட் நிறுவனம் மேற்கொள்ளும். மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கும் முறை விவரம் வருமாறு:

நடப்பு நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

வரும் நிதியாண்டில் (2012-2013) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் கலை அறிவியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் லேப்-டாப் கிடைக்கும்.

2013-2014ம் ஆண்டு முதல் அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், முதல் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.912 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment