ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் திட்டத்துக்கு தடை இல்லை!-உச்சநீதிமன்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும், அறிவித்திருந்தார்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா.



பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி, ஏழைகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து, இதற்கான நிதி ஒதுக்கீட்டை அளித்தார்.

இதற்கிடையே, தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாலாஜி என்ற வக்கீல் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இதேபோல் கடந்த ஆட்சியின்போது இலவச டி.வி. வழங்கப்பட்டதை எதிர்த்தும் இவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், மேலும் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறி இருந்தார்.

இலவசங்கள் வழங்க தடை இல்லை

இந்த வழக்கு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், "தமிழக அரசு அறிவித்து இருக்கும் திட்டம் ஏழை மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம். இதை பாரபட்சம் இன்றி அமல்படுத்துவோம்'' என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார்கள்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment