பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்

அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்ததைத் போல கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தினார்.

பொங்கல் முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.


தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தனித் துறையை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை என்ற இந்தத் துறை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் பணியை துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக ஏழைப் பெண்களுக்கு திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்தபடியாக ரேசன் கார்டுகள் உள்ள அனைவருக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்கும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த டெண்டர்கள் ஜூலை 11ம் தேதி திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்தத் திட்டங்கள் அமலுக்கு வருகின்றன.

இந் நிலையில் இன்னொரு முக்கிய திட்டமான கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக கறவை மாடுகளும், நான்கு ஆடுகளும் அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றும் பணியை முதல்வர் ஜெயலலிதா துவக்கியுள்ளார்.

இத் திட்டத்தின்படி 6,000 கிராமங்களில் 60,000 பசுக்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 2.4 லட்சம் ஆடுகளும் வழங்கப்படும். இதன்மூலம் பால் உற்பத்தியை நான்கு மடங்காக்க, அதாவது 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் தவிர, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் செயலாளர்கள் ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணன், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, பால், மீன்வளம், கால்நடைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த இலவச மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை வரும் பொங்கல் அன்று தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த பட்டியலோடு, தமிழகத்தில் தொடங்கவுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் விவரத்தையும் சேர்த்து இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment