உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 3 பேர் குழு-ஜெ அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து பேச்சு நடத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் 2 வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளது.



இந் நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, இடதுசாரிகள், சரத்குமாரின் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை அதில் நீடிக்கின்றன.

உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கட்சிகள் அதிமுக கூட்டணியிலேயே போட்டியிடவுள்ளன. ஆனால், மொத்தமுள்ள இடங்களில் 5ல் ஒரு இடத்தை தங்களுக்குத் தர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இடதுசாரிகளும் அதிக இடங்களைப் பெற முடிவு செய்துள்ளன.

இந் நிலையில் இந்தக் கட்சிகளுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, கட்சியின் சார்பில், நிதித்துறை அமைச்சரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேயர், கவுன்சிலர் பதவிக்கு திமுகவினர் விருப்ப மனு:

இந் நிலையில் திமுக சார்பில் சென்னை மேயர், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவது நேற்று தொடங்கியது. இந்த மனுக்களை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ரூ. 20,000மும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ரூ. 5,000மும் கட்டணமாக செலுத்த வேண்டும் என திமுக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் சென்னை மேயர், கவுன்சிலர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்போரின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட அதிகமாக உள்ளது. 12ம் தேதி வரை இந்த விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

No comments:

Post a Comment