மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும்- ஜெயலலிதா

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட பல்வேறு நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த அடிப்படையில் தான், நாளும் சமையல் அறையில் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப் பளுவைக் குறைக்கும் வகையிலும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இல்லத்தரசிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தை நான் உருவாக்கினேன். இந்தத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான 15.09.2011 அன்று தொடங்கி வைத்தேன்.

நீலிகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், அந்தப் பகுதிகளில் நிலவும் குளிச்சியான தட்ப வெட்ப நிலை காரணமாக மின் விசிறியைப் பயன்படுத்த இயலாது என்றும், அதற்கு பதிலாக விரைந்து உணவு சமைத்திடும் வகையில் மின் அடுப்பு (Induction Stove) வழங்கினால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

எனது தலைமையிலான அரசு, திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்று அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே மலைப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மலைப்பகுதிகளில் உள்ள இல்லத்தரசிகளுக்குப் பெரிதும் பயன் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மிக்ஸி மற்றும் கிரைண்டருடன், மின் அடுப்பை வழங்க நான் முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment