10 புதிய மேயர்களும் நாளை பதவியேற்பு-துரைசாமி பதவியேற்பில் ஜெ. பங்கேற்பு


தமிழகத்தின் பத்து மாநகராட்சிகளின் புதிய மேயர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சிக் கவுன்சிலர்களும் நாளை பதவியேற்கின்றனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. பத்து மாநகராட்சிகளையும் அது கைப்பற்றியது. நகராட்சிகளில் 124ல் 89 இடங்களை அது கைப்பற்றியது.

இந்த நிலையில் புதிய மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்.

புதிய மேயர்கள் பதவியேற்பையொட்டி அனைத்து மாநகராட்சிகளிலும் விழாக் கோலம் காணப்படுகிறது.

சென்னையில் நாளை காலை 10 மணிக்கு புதிய மேயர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியிருப்பதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயராக சைதை துரைசாமி நாளை பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 200 கவுன்சிலர்களும் நாளை பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழா ரிப்பன் மாளிகையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார். இதையொட்டி ரிப்பன் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment