10 புதிய மேயர்கள் பதவியேற்றனர்: சைதை துரைசாமி பதவியேற்பை நேரில் வந்து வாழ்த்தினார் ஜெ.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 10 மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயராக சைதை துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்தினார்.

தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. சட்டசபை தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுக கைபற்றியது. 125 நகராட்சிகளில் 89 இடங்களிலும், 529 பேரூராட்சிகளில் 287 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.

சென்னையில் சைதை துரைசாமி, மதுரையில் ராஜன் செல்லப்பா, கோவையில் செ.ம. வேலுச்சாமி, திருச்சியில் ஜெயா, திருநெல்வேலியில் விஜிலா சத்தியானந்த், திருப்பூரில் விசாலாட்சி, தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, சேலத்தில் சவுண்டப்பன், வேலூரில் கார்த்தியாயினி, ஈரோட்டில் மல்லிகா பரமசிவம் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

சென்னை விழாவில் ஜெயலலிதா

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் பிரமாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மேயர் சைதை துரைசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் மேயராகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.எனவே அதிமுகவினர் மிகப் பெரிய உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா முகம் நிறைய மகிழ்ச்சியுடன் விழாவில் பங்கேற்றார்.

மேயர் உடையில் துரைசாமி

மேயராகப் பதவியேற்றகுக் கொண்ட சைதை துரைசாமி, மேயர்கள் அணியும் பாரம்பரிய அங்கி, 18 பவுன் தங்கச் சங்கிலி, கையில் செங்கோல் ஆகியவை கொடுக்கப்பட்டன. பின்னர் அவர் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்குக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அதையடுத்து உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியது.

இதேபோல மற்ற 9 மாநகராட்சிகளிலும், புதிய மேயர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்களும், நகராட்சி தலைவர்களுக்கு நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

இவர்கள் தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் இன்று பதவி ஏற்கின்றனர்.

முன்னதாக,உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சிகளைச் சேர்ந்த நகராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என 380க்கும் மேற்பட்டோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

No comments:

Post a Comment