திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இன்று ஜெயலலிதா தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 7 இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா அங்கு பெரியார் சிலை பஸ் நிறுத்தம், புத்தூர் நான்கு ரோடு, உறையூர் நாச்சியார் கோயில், தென்னூர் மந்தை, செடல் மாரியம்மன் கோயில், டிவி.எஸ். டோல்கேட், காஜாமலை பிரதான சாலை, எடமைப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.

ஜெயலலிதா வருவதையொட்டி அதிமுகவினர் குஷியடைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தையும் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாளை கருணாநிதி

இதேபோல திமுக வேட்பாளர் நேருவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நாளை பிரசாரம் செய்து பேசுகிறார். திருச்சி புத்தூர் நான்கு ரோடு சந்திப்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி உரை நிகழ்த்துகிறார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஸ்டாலின் தொடங்கினார்

மறுபக்கம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை நேற்றே தொடங்கி விட்டார். நான்கு நாட்களுக்கு அவர் தொகுதியை வலம் வருகிறார்.

No comments:

Post a Comment