எனது ஆட்சியில் 2வது பசுமைப் புரட்சி ஏற்படும்: ஜெயலலிதா நம்பிக்கை

எனது ஆட்சியில் தமிழகத்தில் 2வது பசுமைப் புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தொடங்கிய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,

நம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் ஊழலை முதலில் ஒழி்கக வேண்டும். ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளால் தான் முடியும். எனவே மக்கள் நலத் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.


ஏராளமான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக உள்ளாட்சி, சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களின் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். வறுமை ஒழிப்பு, கட்டமைப்பு, வருமானம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் நகர்ப்புற, கிரமாப்புற வேறுபாடுகளைக் களைய இந்த அரசு பாடுபடும். என்னதான் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், இன்னும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவில்லை.

அதனால் இந்த அரசு வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண முயற்சி மேற்கொள்ளப்படும். 2வது பசுமைப் புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன். இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 மடங்காகும் என்று நம்புகிறேன். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் நமது விவசாயிகளின் முன்னேற்றத்தி்ற்கு உதவியாக இருக்கும்.

மீன்பிடி திட்டங்கள், மீன்பிடி கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு கடலோர மாவட்ட ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மிகவும் கவலை அளிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பொது விநியோகம் மூலம் அரிசியை இலவசமாகவும், பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய் போன்றவைகளை நியாய விலை கடைகளில் மானிய விலைக்கு வழங்கி வருகிறது. இதற்காக அரசு பெருந்தொகையை மானியமாக கொடுக்கிறது.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வேண்டும், உணவுப் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். கல்வி, குடும்ப நலத்திற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும். மக்களின் உடல் நலம் மிகவும் முக்கியம். அவர்களுக்கு சுகாதாரப் பயன்கள் ஒழுங்காக கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். விரைவில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் மேல்நிலைப்பள்ளி வரை கற்க வேண்டும் என்பதற்காக அரசு மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்டாப் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

சுத்தமான குடிநீர், அடிப்படை சுகாதார வசதி, மருத்துவமனை, சிறந்த பள்ளிகள் அமையும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு புதிதாக தங்கும் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். அந்த கட்டிடங்கள் தரமானவையா என்பதை கண்காணிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அரசுத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்பார்கள். மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், கிராம சுகாதாரப்பணிகள் போன்றவற்றில் ஊராட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். கிராமப்புறங்கள் கழிவு பொருட்களை கொட்டும் இடமாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மழைக்காலம் என்பதால் நிவாரண உதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஏழை-எளிய மக்களுக்கு பயனளிக்கும் திருமண உதவி திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற சமூக நல திட்டங்களுக்கு உண்மையான பயணாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும்.

பல திட்டப்பணிகளில் சிலவற்றைத் தான் இங்கு தெரிவித்துள்ளேன். அவற்றை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment