உத்தபுரம் பிரச்சனை: ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு

 உத்தபுரத்தில் ஒரு ஜாதி பிரச்சனையைத் தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்றும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசை பாராட்டுவதாகவும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22 ஆண்டுகளாக, மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினரிடையே இருந்த கசப்பு உணர்வை நீக்கி ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி சுமூகமான தீர்வு கண்ட தமிழக அரசை இந்து முன்னணி பாராட்டுகிறது.

இந்து மதத்தில் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம், நாங்கள் ஒற்றுமையாக இக்கிறோம், ஒற்றுமையாக இருப்போம் என்று உலகிற்கு உணர்த்திய உத்தபுரம் மக்களுக்கும் குறிப்பாக ஹரிஜன, பிள்ளைமார் சமுதாயப் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு ஜாதி பிரச்சனையைத் தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஆலயத்திற்குச் சென்று ஹரிஜனங்கள் வழிபாடு செய்ய முயற்சி எடுத்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க், துணை கண்காணிப்பாளர் மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் தினகரன், ஆவின் முன்னாள் பொது மேலாளர் கே.ஆதிமூலம், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சின்மயா சோமசுந்தரம், எழுமலைப் பண்ணையார் எஸ்.ஏ. நடராஜ தேவர், பா.ஜ.கவைச் சேர்ந்த பொன்.கணாநிதி, ரவிக்குமார் ஆகியோரைப் பாராட்டுகிறோம்.

ஹரிஜன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு இந்து இயக்க பெரியோர்களை அணுகியதால்தான் இந்த பிரச்சனைக்குச் சுமூகத் தீர்வு ஏற்பட்டது.

உத்தபுர மக்களின் இரு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற காவல்துறை எடுக்கும் முயற்சிக்கு மாவட்ட வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு நல்கிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உத்தபுரம் முத்தாலம்மன் ஆலயப் பிரவேசம் முடிவல்ல; நல்ல தொடக்கம் தான், நிரந்தர தீர்வு ஏற்பட தமிழக அரசு இரு சமுதாயப் பெரியோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயம் கிடைத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

சமாதான முயற்சிக்கு பாடுபட்ட பெரியோர்களுக்குச் சமுதாய நல்லிணக்க விருது வழங்கி கௌரவிக்க தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

உத்தபுரம் விஷயத்தில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எடுக்கும் நடவடிக்கைக்கு இந்து முன்னணி என்றும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

No comments:

Post a Comment