சங்கரன்கோவில் இடைத் தேர்தல்- அதிமுக சார்பில் போட்டியிட 2 பேர் தேர்வு செய்த ஜெ.- மதிமுகவும் ரெடி

 சங்கரன் கோவில் இடைத் தேர்தலை சந்திக்க மதிமுகவும், அதிமுகவும் தயாராகி விட்டன. இரு கட்சிகளிலும் வேட்பாளர்களும் கூட தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியிலிருந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் அமைச்சராக கருப்பசாமி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் நடைபெற உள்ளது. 



இத்தொகுதியின் இடைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் மதிமுக இடைத் தேர்தல் பணியினை துவக்கும் வண்ணம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் பொது செயலாளர் வைகோ தலைமையில் குருவிக்குளம் அடுத்த மைப்பாறையில் ம.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் கட்சி ப‌ொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. 

அதில், அவர் ‌பேசியதாவது, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி முடிவு செய்துள்ளது என்றார். மதிமுக சார்பில் இத்தொகுதியில் முன்னாள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சதன் திருமலைக்குமார் களத்தில் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மதிமுகவுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவும் வைகோ வருகைக்கு முன்பே இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டத்தை மாவட்ட செயலாளரும், மாவட்ட அமைச்சருமான செந்தூர் பாண்டியனை வைத்து தொடங்கி வைத்துள்ளது.

மேலும் அதி்முக சார்பில் மதிமுக வேட்பாளரை தோற்கடித்திட 2 பேரை கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தேர்ந்தெடுத்து அவர்களிடம் நேர்காணலையும் முடித்து விட்டார். இரு நபர்களையும் சங்கரன்கோவில் பகுதியிலேயே வீடு எடுத்து தங்கி கட்சி பணிகளை தொடங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அந்த இரு நபர்களும் முதல்வர் நடத்திய நேர் காணலில் மதிமுகவோ, திமுகவோ எந்த கட்சி நின்றாலும் தோற்கடித்து வெற்றி பெறுவோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்து மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் சமாதியில் மலரஞ்சலி வைத்து விட்டு கட்சி பணிகளில் கவனம் செலுத்தவும் தொடங்கி விட்டார்கள்.

சங்கரன்கோவிலை பொறுத்தவரை அதிமுக சார்பிலும், மதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் தயாராகிவிட்டார்கள். தேர்தல் கமிஷன் தேதியை மட்டும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.

No comments:

Post a Comment