பெத்திக்குப்பத்தில் 79 கோடியில் நவீன சோதனைச்சாவடி - ஜெ. அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட 79 கோடியே, 77 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

அண்டை மாநிலங்களுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லுதல், அத்தியாவசிய பொருட்களை கடத்துதல்; வரி ஏய்ப்பு போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் வண்ணம், தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லைப் பகுதிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கல் மற்றும் அதற்கான கட்டணத்தை வசூல் செய்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்படி சோதனைச் சாவடிகள் ஆற்றுகின்றன.

இந்தப் பணிகளை போக்குவரத்துத் துறையினர் மேலும் திறம்பட ஆற்றும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

நவீன சோதனைச்சாவடி 

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், கிடங்கு வசதிகள், சோதனைச் சாவடி நிலையங்கள், சாலை குறியீட்டு பலகைகள் மற்றும் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள், கணினி ஆகிய வசதிகளும் இடம் பெறும். இச் சோதனைச் சாவடியில் போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய் துறை, வணிகவரித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அவை ஒருங்கிணைந்து செயல்படும்.

79 கோடியே 77 லட்சம் 

இதனை நிறைவேற்றும் வகையில் பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர பணிகளுக்காக 79 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். பெத்திக்குப்பம் சோதனைச் சாவடி நவீனமயமாக்கப்பட்டு, பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் சோதனைச் சாவடியாக மாற்றப்படுவதன் மூலம், அதிக வாகனங்கள் குறைவான நேரத்தில் கையாளப்படுவதோடு, வாகனங்கள் அதிக நேரம் நிற்பது தவிர்க்கப்படும்.

இது மட்டுமல்லாமல் பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் சென்றடையவும் வழிவகை ஏற்படும். மேலும் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படுவதால், வரி ஏய்ப்பு, அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், மது மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல், போன்ற சமூக விரோதச் செயல்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment