முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தினமும் வரும் 3 ஆயிரம் கோரிக்கை மனுக்கள்

 தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தினமும் 3 ஆயிரம் விண்ணப்ப மனுக்கள் குவிந்து வருவதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனுக்கள் உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் சந்தித்து குறைகளை சொல்ல முடியாத நிலை இருப்பதால் நிவாரணம் கேட்டு சென்னை கோட்டையில் உள்ள முதல்வர் தனிப் பிரிவில் பொதுமக்களும், அதிமுகவினரும் மனுக்களை தந்து விட்டு செல்கிறார்கள். தபால், கூரியர் மூலமும், போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் வீடு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லுமிடங்களில் பெறப்படும் மனுக்கள், என அனைத்து மனுக்களும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது.

நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிவதால் தனிப்பிரிவில் உள்ள கணினியில் மனுதாரரின் பெயர், கோரிக்கை விபரங்களை பதிவு செய்து அந்த மனுக்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. இதன்பின்னர் அந்தந்த துறைக்கு மனுக்கள் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன. முதல்வர் தனிப்பிரிவுக்கான ஐஏஎஸ் அந்தஸ்து கொண்ட ஒரு உயர் அதிகாரி சார்பில் இவை அனுப்பப்படுகின்றன.

பத்துநாட்களுக்குள் பதில்

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்து 10 நாட்களுக்குள் நிச்சயம் பதில் அனுப்பப்படுகிறது என்று தனிப்பிரிவு அதிகாரி தெரிவித்தார். நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது முடியாது என்று அதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும். கடந்த ஆட்சியில் தரப்பட்ட மனுக்கள் மீதான தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மனுக்கள் மீதான நடவடிக்கை பற்றிய விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த பணிகளை கவனிப்பதற்காக, கோட்டையில் தனி அலுவலகம் நாள் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment