நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும்- ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து

இதயம் முழுவதும் இறை உணர்வு பொங்கிப் பெருகட்டும், நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விடுத்துள்ள செய்தியில், தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு அவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு வாழ்வதையே தம்முடைய வாழ்க்கையாக ஏற்று தனது ஒரே மகனை பலிகொடுக்க முன்வந்த இறைவனின் திருத்தூதர் இப்ராகிம் தியாகத்தை நினைவு கூர்கின்ற திருநாளே பக்ரீத் திருநாளாகும்.

அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல் ஒன்று மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். இந்த மகிழ்ச்சியே மனித குலத்தை காத்து நிற்கும் அரணாக அமையும். இந்த திருநாளில் இதயம் முழுவதும் இறை உணர்வு பொங்கிப் பெருகட்டும்! நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும்!

அதிகாலை எழுந்து ஆண்டவனை தொழுது உற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விருந்தளித்து மகிழுகின்ற இந்த இனிய திருநாளில் அன்பும், அறமும், அமைதியும், மனிதநேயமும், சமத்துவமும், உலக சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரட்டும் என்று மனமார வாழ்த்து இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment