ஈரோடு ஆம்னி பஸ் விபத்தில் 8 பேர் பலி-ஜெ. ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

ஈரோடு அருகே டேங்கர் லாரியுடன் ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சூரியம்பாளையம் கிராமம், சித்தோடு அருகில் 6.11.2011 அன்று பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, எரிபொருள் திரவம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது மோதியதால், டேங்கர் லாரியில் இருந்த எரிபொருள் பேருந்தில் சிதறி, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதில், பேருந்து ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும்
உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்துயரச் சம்பவத்தில் ஏழு பேர் படுகாயமடைந்தனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், ஈரோடு மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள பலிக்கு நிவாரண நிதி

இதேபோல தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்திற்குப் பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளஆர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

மழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 34 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment