மழை பலி இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு- ஆடு, கோழிகளை இழந்தோருக்கும் நிவாரணம்-ஜெ. அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா
மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாடுகளை இழந்தோருக்கு ரூ. 20,000மும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 2000மும், கோழிகளை இழந்தவர்களுக்கு ரூ. 100ம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 14 பேர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

14 அமைச்சர்களை அனுப்பி வைத்தேன்

இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கும் முன்னேற்பாடுகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பருவமழை தீவிரமடையத் துவங்கிய உடனேயே, கடந்த 1.11.2011 அன்று பன்னிரெண்டு கடலோர மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள பதினான்கு அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தேன். 

கடலோர மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் பெருமக்கள், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டதுடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில், பெருமழையினால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும், கால்நடை இழப்புகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் மூத்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நிதித் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வினை இன்று (7.11.2011) நான் மேற்கொண்டேன்.

இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய 24.10.2011 முதல் இன்று வரை கடும் மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும், மின்னல், இடி தாக்கியதாலும், மண் சரிவினாலும், ஆற்று வெள்ளத்தில் மூழ்கியதாலும், மின்சாரம் தாக்கியதாலும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். பெருமழையின் காரணமாக வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, உணவு, 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வந்தனவே தவிர, இதுவரை தனியே எந்த உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. அவ்வாறு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த உதவிகளுடன், இனி 1,000 ரூபாய் நிவாரண உதவித் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

வீடுகளை சீரமைக்க நிதியுதவி

இந்தப் பெருமழையால் இதுவரை 179 குடிசை வீடுகள் முழுமையாகவும், 705 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.முழுமையாக சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும், பகுதி சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு 2,500 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். 

கால்நடை இழந்தோருக்கு உதவி

இந்த கனமழைக்கு இதுவரை 162 கால்நடைகள் பலியாகியுள்ளன. மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 10,000 ரூபாய் உதவித் தொகையை இனி 20,000 ரூபாயாகவும், ஆடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உதவித் தொகையை இனி 2,000 ரூபாயாகவும், கோழிகளை இழந்த உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 ரூபாய் உதவித் தொகையை இனி 100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

சாலைகள் சீரமைக்கப்படும்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா இடுகட்டி சாலை மற்றும் உதகை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை ஆகியவை இந்த கனமழையால் பெருத்த சேதமுற்றுள்ளன. அவற்றை உடனடியாக செப்பனிட ஆணையிட்டுள்ளேன். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், கோனான்குப்பம் புளியங்கால்வாய் வாய்க்கால் தூர்வாராத காரணத்தால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மேற்படி வாய்க்காலினை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெருமழை காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக செப்பனிடவும், பருவமழை முடிந்தபின் சாலைகளை முழுவதும் சீரமைக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதால், இரு வாரத்திற்கு ஒருமுறை அரசு உயர் அதிகாரிகள் மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment