சொந்த கட்டிடங்களில் காவல் நிலையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.5 கோடியே 14 லட்சம் செலவில் 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், அந்த மாநிலத்தின் மக்கள் வளம்பெற வேண்டும் எனில், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.

மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாறிவரும் சமூகச் சூழ்நிலைக்கேற்ப புதுமையும் திறமையும் பெற்ற காவல்துறையாக, தமிழக காவல்துறையை மாற்றுவதில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

வாடகை கட்டடங்களில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு ஐந்து ஆண்டு காலத்திற்குள் அவை அனைத்தும் சொந்தக் கட்டடங்களிலேயே இயங்க வகை செய்யும் வகையில் புதிய கட்டடங்கள் கட்டப் படவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு, 11 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

11 காவல் நிலையங்களுக்கு கட்டடம்

மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் நகர காவல் நிலையம்; தேனி மாவட்டத்தில் குரங்கணி ஊரக காவல் நிலையம்; ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் கோயில் சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; பாம்பன் சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; கீழச்செல்வனூர் ஊரக காவல் நிலையம்; சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி தெற்கு சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; திருக்கோஷ்டியூர் ஊரக காவல் நிலையம்; திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிக்குளம் நகர காவல் நிலையம்; நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையம்; தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மேற்கு சிறப்பு வகை காவல் நிலையம்; மதுரை நகரில், நு1 கே.புதூர் நகர காவல் நிலையம்; ஆக மொத்தம், 11 காவல்நிலையங்களுக்கு, 5 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்களை கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment