தீபாவளி திருநாளில் இருள் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும்: ஜெயலலிதா வாழ்த்து

இந்த தீபாவளித் திருநாளில் நோக்கும் இடமெல்லாம் களிப்பும், இனிமையும் நீக்கமற நிறையட்டும்; நிம்மதி பெருகட்டும்; உலகம் முழுமையும் அக இருளும், புற இருளும் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சுடர்விடும் தீபங்களின் ஒளி போல மக்கள் மனமெல்லாம் இனிமை பொங்கும் திருநாள். மறம் வீழ்ந்து அறம் நிலை பெற்றதால் நாடெங்கும் நன்மைகள் பெருகிடும் நன்னாள். இல்லங்கள் தோறும் இருள் அகன்று ஒளி மிளிர இதயங்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாள் தீபாவளி.

இந்த தீபாவளித் திருநாளில் நோக்கும் இடமெல்லாம் களிப்பும், இனிமையும் நீக்கமற நிறையட்டும்; நிம்மதி பெருகட்டும்; உலகம் முழுமையும் அக இருளும், புற இருளும் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும். இந்த இனிய திருநாளில் தீபாவளியைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை நான் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரோசையா வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசையா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

தீபஒளி திருநாளான தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தீபத்திருநாள் இருள் எனும் அறியாமையை அகற்றி, வெற்றிகளை தந்து, ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

1 comment: