முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.



அதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன். நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம்.

இம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், நானும் எனது தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலாவதாக இருப்போம். இப்பிரச்சனையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்தவித விரோதமும் இல்லை. கேரள மக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே, அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.

இப்பிரச்சனையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இச்சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், 15.12.2011 அன்று காலை 11.00 மணிக்கு ஒரு சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். இந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளர்.

No comments:

Post a Comment